
தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக முன்னதாக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வழக்கமாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் என்பது ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மழை பெறுவது வழக்கம்.
ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக தென்மேற்கு பருவமழை முன்னதாக தொடங்கியுள்ளது. நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் மழை பொழியத் தொடங்கியதே இதன் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் நேற்று முதல் சாரல் மழையுடன் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் குற்றாலத்தில் குளுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.
அருவியிலும் நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சீசன் முன்கூட்டியே தொடங்கியதாக, சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வழக்கத்திற்கு மாறாக சீசன் முன்னதாக தொடங்கியதால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை மற்றும தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்பொழுது பரவலாக மழை பொழிந்து வருவது பொது மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.