
கோயம்புத்தூர்
கோவை ஜெம் மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்க ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டன. நோயாளிகள் விரைந்து வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம், இராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையான ஜெம் மருத்துவமனையில் இன்று காலை 7 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட உடனேயே மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் அவசர அவசரமாக பாதுக்காப்புடன் வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்புத் துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டதால் ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரிசையாக விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
மின்கசிவால் ஏற்பட்ட இந்த தீ, அறுவை சிகிச்சை அறைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு பண்டல்களில் பரவியதால் தீ மளமளவென எரிந்து மற்றப் பகுதிகளுக்கும் பரவியது.
இந்தத் தீ விபத்தால் அப்பகுதி பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும் நிலவியது.
தீ முழுவதும் பரவுவதற்குள் நோயாளிகள் விரைந்து வெளியேற்றப்பட்டதால் இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து குறித்து காவலாளர்கள் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.