நெருங்கும் தென்மேற்கு பருவமழை! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கரூரில் ஆலோசனை கூட்டம்...

First Published Jun 9, 2018, 11:34 AM IST
Highlights
southwest monsoon Advance activities meeting on precautionary measures in Karur


கரூர் 

தென்மேற்கு பருவமழை நெருங்குவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கரூர் ஆட்சியரகத்தில் நடைப்பெற்றது.

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழையை நெருங்குவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார். அதில், "கரூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகள் ஓடைகள் குளம் மற்றும் கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் கரைகளை பலப்படுத்துவது, பழுது ஏற்பட்டுள்ள மதகுகளை பராமரிப்பு செய்வது, 

வெள்ள நீர் பாதுகாப்பாக வடிகால் மூலம் வெளியேற்ற அமைப்புகளை உருவாக்குதல், வெள்ளத்தடுப்புக்காக மணல் மூட்டைகளை தேவையான அளவுக்கு வைத்துக்கொள்ளுதல் தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும், வெள்ளக் காலங்களில் ஆற்றில் வரும் கூடுதல் தண்ணீரின் அளவை கண்காணித்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை தெரியப்படுத்த வேண்டும். 

அதுமட்டுமல்லாமல் மழை வெள்ள காலங்களில் உதவி தேவைப்படுவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட பேரிடர் மேலண்மை அவசர உதவி கட்டுப்பாட்டு அறைக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு உதவி மற்றும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்" என்று ஆட்சியர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, வேளாண் இணை இயக்குனர் ஜெயந்தி, 

குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சந்திரசேகர், தீயணைப்பு துறை மற்றும் மீட்புப் பணி துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்பட அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். 

click me!