தென் மாவட்டங்களில் கனமழை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை சற்று தாமதமாக கிடைத்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டி போட்ட நிலையில், தென் மாவட்டங்களை கனமழை மிரட்டி வருகிறது. தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாயினர். சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறு, குளங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. கட்டடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பாதிப்புக்கு உள்ளான இடங்களில் தமிழக அரசு மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தென் மாவட்டங்களில் கனமழை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை சற்று தாமதமாக கிடைத்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். தொடர்ந்து, பிரதமர் மோடியை இன்று இரவு 10.30 மணிக்கு சந்தித்து வெள்ள நிவாரண பணிகள் குறித்தும், தென் மாவட்ட கனமழை குறித்தும் அவர் விவாதிக்கவுள்ளார். மேலும், மத்திய அரசிடம் கோரிய நிவாரணத் தொகையை விடுவிக்குமாறும் அப்போது அவர் வலியுறுத்தவுள்ளார்.
முன்னதாக, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாடு அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பெருமளவு பாதிப்பும், சேதமும் தவிற்கப்பட்டது. புயல் ஓய்ந்த மறுநாளே சென்னையில் போக்குவரத்து சீரானது. புயலுக்கு முன்பும், பின்பும் அரசு எடுத்த நடவடிக்கையால்தான் பாதிப்புகள் குறைந்தது.” என்றார்.
ஒன்றிய அரசின் குழுவினர் 4 மாவட்டங்களில் ஆய்வு செய்ததாக குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், இது பெரும் பேரிடர் என்பதால் கூடுதல் நிதியை கோரியுள்ளோம். ஒன்றிய அரசின் நிதி வரட்டும் என காத்திருக்காமல் 4 மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டை அரசு அறிவித்தது. ஒன்றிய அரசின் நிதியை முழுமையாக பெற்றால்தான் முழுமையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.
தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்பு: டெல்லியில் இருந்து தூத்துக்குடி செல்லும் முதல்வர் ஸ்டாலின்!
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “மழை வெள்ளதால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரலாற்றில் இதுவரை பதியப்படாத அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகி இருந்தது. ஒராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் கொட்டித் தீர்த்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். தென் மாவட்டங்களில் 8 அமைச்சர்கள், 10 ஆட்சி அலுவலர்கள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மிக்ஜாம் புயலின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போன்றே அதேஅளவிற்கு தென் மாநிலங்களிலும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 12,650 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை சற்று தாமதமாக கிடைத்தது. ஆனாலும், மீட்பு பணிகளை தமிழக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.” என்றார்.
“தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க கோரியுள்ளோம் அதன் மூலம் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியும். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு இன்று இரவு 10.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை தென் மாவட்டங்களுக்கு செல்கிறேன்.” என்றும் ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.