
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிளில் சென்ற அதிமுக பிரமுகரின் மகன் கார் மோதி பலியானார். காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாடி பாலகிருஷ்ணன். இவர் அ.தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழியின் 9-வது வார்டு முன்னாள் கவுன்சிலர்கள்.
இவர்களது மகன் ராஜகுரு (27). இவர் டிப்ளமோ படித்துவிட்டு ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு காற்றாலையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவருக்கும் தாழக்குடியை அடுத்த பூலாங்குழி பகுதியை சேர்ந்த மெர்லின் ஷீலா (24) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு திருமணம் நடந்து 17 நாட்கள் தான் ஆகிறது. மெர்லின் ஷீலா தாழக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ராஜகுரு நாள்தோறும் காலையில் தனது மோட்டார் சைக்கிளில் மனைவியை அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு மாலையில் அழைத்து வருவார்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மனைவியை அழைத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ராஜகுரு சென்றார். அவர், ஆரல்வாய்மொழி அருகே உள்ள ஔவையார் அம்மன் கோயிலை அடுத்த தோப்பூர் விலக்கு பகுதியில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது படுவேகமாக மோதியது. இதில் ராஜகுரு காரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி அப்பகுதியினர் ராஜகுருவின் பெற்றோருக்கும், ஆரல்வாய்மொழி காவலாளர்களுக்கும் தகவல் கொடுத்தனர். பெற்றோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
ஆய்வாளர் ஜெயலெட்சுமி விரைந்து வந்து அங்கு விசாரித்தபோது ராஜகுரு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரின் பதிவெண் பலகை கிடந்தது. உடனே, அதனை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
அப்போது அந்த கார் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இந்த விபத்து குறித்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.