பெற்றோருக்கு பணம் தர முடியாததால் மகன் விபரீத முடிவு; வீட்டில் தூக்குப்போட்டு மகன் தற்கொலை…

First Published Oct 12, 2017, 7:35 AM IST
Highlights
Son can not afford to pay parental decision Son committed suicide


திருப்பூர்

பெற்றோருக்கு பணம் தர முடியாத வேதனையில் மகன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள முருகன்குடியைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் வேலய்யன் (22). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே திருமங்கலத்தில் உள்ள ஒரு நூற்பாலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இதே மில்லில் முருகன்குடியைச் சேர்ந்த கலைமணி (21) என்ற பெண்ணும் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரே ஊர் என்பதால் பழக ஆரம்பித்து அந்தப் பழக்கம் அவர்களிடையே காதலாக மலர்ந்தது.

இதனையடுத்து இருவரும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் புதுமண தம்பதிகள் இருவரும், நூற்பாலையில் உள்ள குடியிருப்பில் தங்கி, வேலைக்குச் சென்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மில் குடியிருப்பில் வேலய்யன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வெள்ளகோவில் காவல் நிலையத்தில் கலைமணி புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் இறந்துபோன வேலய்யனின் பெற்றோர், பணம் கேட்டதாகவும், அவர்கள் கேட்ட பணத்தை வேலய்யனால் கொடுக்க முடியாததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரியவந்தது.

click me!