
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் ரேசன் மண்ணெண்ணெய் கடத்தப்படுவதை தடுக்க அதிகாரியக்ள் சோதனையில் ஈடுபட்டபோது 1100 லிட்டர் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தனர். மண்ணெண்ணெய் கடத்திக்கொண்டு வந்த வாகன ஓட்டிகள் தப்பியோடிவிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேசன் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை பறக்கும்படை தனி வட்டாட்சியர் சி. ராஜசேகர் தலைமையில் தனித் துணை வட்டாட்சியர் முருகன், ஊழியர் டேவிட் ஆகியோர் கொண்ட குழுவினர் மார்த்தாண்டம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தொலையாவட்டம் பகுதி வழியாக மண்ணெண்ணெய் கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த மினிலாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வண்டியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்ததில் 22 கேன்களில் பதுக்கி வைத்திருந்த 700 லிட்டர் மண்ணெண்ணெய் கண்டறியப்பட்டு வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் மீனவர்களுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் இனயம் அரசு மண்ணெண்ணெய் கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் கிள்ளியூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்டவர் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோன்று, நேற்று அதிகாலை சொகுசு வேன் ஒன்று முள்ளங்கனாவிளையிலிருந்து கிள்ளியூரை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, தாழக்கன்விளை பகுதியில் உள்ள ஒரு மதில் சுவர் மீது அந்த வேன் மோதி நின்றது.
இதனையடுத்து, அப்பகுதியினர் வேன் முன் திரண்டனர். இதனைகண்ட, வேன் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். பின்னர், அங்கு திரண்ட மக்கள், வேனை சோதனை செய்தபோது அதில் 21 கேன்களில் 400 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பறக்கும்படை வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையிலான குழுவினர் மண்ணெண்ணையை கைப்பற்றி தூத்தூரில் உள்ள மண்ணெண்ணை கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து காவலாளர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.