
பழைய நோட்டுகளை மாற்றி, வங்கிகளில் சிறு வணிகர்கள் பணம் எடுக்க ரூ.50 ஆயிரம் வரை உச்சவரம்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பணப்புழக்கமும் அதிவேகத்தில் குறைந்து உள்ளது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் கடந்த 10ம் தேதி முதல் வங்கிகளில் தவமாய் தவமிருக்கிறார்கள். இதில் பொதுமக்கள் மட்டுமின்றி சிறு வணிகர்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையொட்டி, சிறு வணிகர்களின் வியாபார தேவைகளை கருத்தில் கொண்டு அவர்கள் பணம் எடுக்கும் உச்சவரம்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த வணிகர்கள் தங்கள் நடப்பு கணக்கில் இருந்து வாரம் ஒன்றுக்கு ரூ.50,000 வரை எடுக்க வழி செய்யப்படுகிறது.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தவிர்க்க முடியாத சூழல்களை தவிர மற்ற நேரங்களில் தங்கள் பண பரிவர்த்தனைகளை ஆன்–லைன் மூலமே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் இதற்கான கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு தேசிய செலுத்து கழகம் மற்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
கிராமப்புறங்களை பொறுத்தவரை அங்கு வங்கிப்பணிகளை மேற்கொள்ளும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் நிதி நிறுவனங்களின் கையிருப்பு தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு சூழ்நிலைக்கு தகுந்தவாறு இதன் மதிப்பை பல மடங்காக வங்கிகள் உயர்த்தும். அத்துடன் 1.30 லட்சம் கிளை தபால் நிலையங்களில் பணம் மாற்றவும், வழங்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.