
அரியலூர்
அரியலூரில் சாராயம் குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையை அரிவாளால் வெட்டிவிட்டு மகன் தலைமறைவானார். அவரை காவலாளர்கல் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சூரக்குழி சாலைத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாகராஜன் (52). இவருக்கு சரோஜா (42) என்ற மனைவியும், இந்திரன் (23), ரஞ்சித் (20) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
நாகராஜன் தினமும் சாராயக் குடித்து விட்டுவந்து வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன், சரோஜாவிடம் சாராயம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அங்கிருந்த இளைய மகன் ரஞ்சித், தாயிடம் ஏன் தகராறில் ஈடுபடுகிறீர்கள்? என்று தந்தையை கேட்டுள்ளார். இதனால் தந்தை, மகனுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது நாகராஜன், ரஞ்சித்தை தகாத வார்த்தையால் திட்டி அடித்தாராம். இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித், அருகில் இருந்த அரிவாளை எடுத்து நாகராஜன் கழுத்துப் பகுதியில் வெட்டிவிட்டார்.
இதில் பலத்த காயமடைந்த நாகராஜன் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே என்ன செய்வதென்று தெரியாமல் ரஞ்சித் அங்கிருந்து ஓடிவிட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் 108 அவசர ஊர்தி மூலம் நாகராஜனை மீட்டு சிகிச்சைக்காக செயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இதுகுறித்து நாகராஜனின் உறவினர் தனபால் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் ரவி வழக்குப்பதிந்து ரஞ்சித்தை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.