
ஈரோடு
உணவுப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகள் தங்களது நிறுவனங்களுக்கு உரிமம் - பதிவுச்சான்று பெறவில்லை என்றால் ஆறு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.5 இலட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று ஈரோடு ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "உணவுப் பொருள் வணிகம் செய்யும் அனைவரும் உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உரிமம் - பதிவுச் சான்று பெற்று வணிகம் செய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள இருபதாயிரம் வணிக நிறுவனங்களில் இதுவரை பத்தாயிரம் பேர் மட்டுமே உரிமம் - பதிவுச் சான்று பெற்றுள்ளனர்
எனவே, அனைத்து உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த உரிமத்தைப் பெற விரும்புவோர் www.fssai.gov.in <http://www.fssai.gov.in> என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
உரிமம் - பதிவுச்சான்று பெறாத வியாபார்கள் மீது உணவுப் பாதுகாப்பு தர சட்டம் 63-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டு ஆறு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.5 இலட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் உணவுப்பொருள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மக்கள் தயங்க வேண்டாம்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்து இருந்தார்.