சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் திட்டம் நிறுத்தம் – தமிழக அரசு தகவல்

Asianet News Tamil  
Published : Nov 03, 2016, 02:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் திட்டம் நிறுத்தம் – தமிழக அரசு தகவல்

சுருக்கம்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு கடிதம் அனுப்பியிருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழு தனது 96வது கூட்டத்தில், கேரள அரசின் கோரிக்கையை ஏற்று, அட்டப்பாடி பள்ளத்தாக்கில் அணை கட்டும் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு நிலையான ஆய்வு வரம்புகளை மத்திய அரசு வழங்கலாம் என்று அளித்த பரிந்துரையை தற்போது மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பான நடுவர் மன்ற இறுதி ஆணையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்குகள் முடியும் வரையிலும் அல்லது தமிழ்நாடு அரசின் இசைவினை பெறும் வரையிலும் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

2012ம் ஆண்டு ஜூன் மாதம் அட்டப்பாடி பாசனத் திட்டத்துக்காக கேரள அரசு அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது என ஊடகங்களில் செய்திகள் வந்தது. இதையடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.

அதில், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின் மீது உச்ச நீதிமன்றத்தில், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மற்றும் காவேரி நடுவர் மன்றத்தில் விளக்கங்கள் கோரும் மனுக்கள் நிலுவையில் உள்ளது.

இதையொட்டி காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படும் வரையிலோ அல்லது நீதிமன்ற உத்தரவுகள் வரும் வரையிலோ கேரள அரசு எந்த ஒரு திட்டத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என கேரள அரசுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொண்டது.

மேலும், மத்திய நீர் வளக்குழுமம் எந்த ஒரு தொழில்நுட்ப அனுமதியும் வழங்கக்கூடாது எனவும் கேட்டு கொண்டார்கள். அதைத் தொடர்ந்து தமிழக அரசால் இது குறித்து மத்திய அரசுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன.

கடந்த 19.9.2013 அன்று தமிழ்நாடு அரசுக்கு மத்திய நீர் ஆதார அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவினைப் பெற்ற பின்னர், காவேரி நடுவர் மன்றத்தின் இசைவைப் பெறும்படி கேரள அரசு கேட்டுக் கொள்ளப்பட்டது என தெரிவித்தது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக்குழு  2016ம் ஆண்டு மார்ச் மாதம் 28, 29ம் தேதிகளில் நடைபெற்ற 92வது கூட்டத்தில், அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொள்வதற்கான நிலையான ஆய்வு வரம்புகளுக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு கேட்டுக் கொண்ட கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசின் கருத்தினை பெறுமாறும், தமிழ்நாடு அரசின் கருத்து பெறப்பட்டபின் தான், கேரள அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் முடிவு எடுத்தது.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக்குழு 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 11, 12ம் தேதிகளில் நடைபெற்ற 96வது கூட்டத்தில் கேரள அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு செய்வதற்கான நிலையான ஆய்வு வரம்புகளுக்கு அனுமதியளிக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது.

மத்திய நீர் ஆதார அமைச்சகத்தின் 19.9.2013 நாளிட்ட கடிதத்துக்கும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழுள்ள வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் மார்ச் மாதம் 28, 29ம் தேதிகளில் நடந்த கூட்டத்தின் முடிவுக்கும் முரணானதாக இந்த பரிந்துரை அமைந்தது.

இக்குழு தமிழ்நாட்டின் கருத்தினைப் பெறாமல் முடிவெடுத்துள்ளது என்பதை தெரிவித்தும், மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடம் இருந்து தமிழக அரசுக்கு இதன் தொடர்பாக கடிதங்கள் ஏதும் வரவில்லை என்பதை எடுத்துரைத்தும், அவ்வாறு கடிதங்கள் அனுப்பப்பட்டு இருப்பதாக இக்குழுவின் நடவடிக்கை குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.

இதுபற்றி, முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 27.8.2016ம் தேதி பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தார். மேலும், இப்பிரச்சனையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, வல்லுநர் மதிப்பீட்டுக்குழு, இத்திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான நிலையான ஆய்வு வரம்புகள் வழங்குவதற்கு அளித்த பரிந்துரையை உடனடியாக திரும்ப பெற மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் அதனை சார்ந்த முகமைகளுக்கு அறிவுரை வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு நடைமுறைக்கு வரும் வரையிலும் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இறுதியாக்கம் செய்யப்படும் வரையிலும், கேரள மற்றும் கர்நாடக அரசுகள் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு மத்திய  சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் நீர் ஆதார அமைச்சகம் ஆகியன அனுமதியக்க கூடாது எனவும் கேட்டு கொண்டார்.

இதனை தொடர்ந்து, ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், தலைமைச் செயலாளர் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்துக்கும் மற்றும் நீர் ஆதார அமைச்சகத்துக்கும் இதே கருத்துகளை வலியுறுத்தி 30.8.2016 அன்று கடிதம் அனுப்பினார்.

இது தொடர்பாக 2.9.2016 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு பிரதமருக்கு தீர்மான நகல் அனுப்பப்பட்டது. அதில், தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானங்களை விரிவாக எடுத்துரைத்து, பிரதமர் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் மத்திய நீர் ஆதார அமைச்சகம் ஆகியவற்றை இந்த தீர்மானத்தின் அடிப்படையில் உடனடியாக மேல்நடவடிக்கை தொடர அறிவுறுத்தும்படி கூறப்பட்டு இருந்தது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கைகளால், சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்டுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை, மத்திய அரசு தடுத்து நிறுத்தி உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வெடிகுண்டாக மாறிய பலூன் கேஸ் சிலிண்டர்.. உடல் சிதறி 3 பேர் பலி.. கதறிய கள்ளக்குறிச்சி.. என்ன நடந்தது?
ஜோதிமணிக்கு செக்..! கொங்கில் ஸ்கெட்ச் போட்ட செந்தில் பாலாஜி..! கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி..?