
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்தை அடுத்த சாத்தூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடந்தது. முத்துப்பேட்டை கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம் என்ற முதியவர் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க வந்திருந்தார். அவர் மனு கொடுத்துவிட்டு ரசீது கேட்டுள்ளார். அப்போது அவரை அவரை வருவாய் அலுவலர் தாக்கியதாக கூறப்படுகிறது.
முதியவரை தாக்கிய எஸ்.ஐ
இதனைத் தொடர்ந்து அந்த முதியவர் பிரச்சனை செய்வதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேசில் சம்பவ இடத்திற்கு வந்த ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முதியவரிடம் வாக்குவாதம் செய்து அவரை நெஞ்சில் குத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதே முதியவர் ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள முத்துப்பேட்டை கிராமத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தனது கோரிக்கை குறித்து மனு கொடுத்துள்ளார்.
என்ன நடந்தது?
ஆனால் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சாத்தூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகளை அணுகி தமது மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று வினவியுள்ளார். மேலும் தமது மனுவை பெற்றுக் கொண்டதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கும்படி கோரியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம நிர்வாக அதிகாரி முதியவரை அடித்து உதைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எஸ்.ஐ தாக்கியுள்ளார்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
முதியவரை தாக்கிய எஸ்.ஐ மீதும், கிராம நிர்வாக அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ''மனு மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்று எவரேனும் கேட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை ஆகும். ஆனால், அந்தக் கடமையைக் கூட செய்யாமல் மக்களை விரட்டியடிப்பது பெரும் குற்றமாகும். இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.
தொடர் சர்ச்சையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்ந்து சர்ச்சையை சந்தித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள கீழடி , பூவந்தி, மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரை பகுதிகளில் கடந்த 21 22 ஆகிய தேதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவை அனைத்தும் தீர்வு காணப்பட்ட மனுக்கள் என்று சிவங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.