
தமிழக அரசுடன் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
டீசல் மீதான வாட் வரி உயர்வு மற்றும் காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு, ஆர்.டி.ஓ. கட்டணம் உயர்வு உள்ளிட்டவைகளைக் கண்டித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக சரக்கு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது டீசல் மீதான வாட் வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை லாரி உரிமையாளர்கள் பிரதானமாக முன்வைத்தனர். இருப்பினும் இறுதிவரை உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது...அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.