லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... அரைநாளிலேயே ஆட்டம் கண்ட தமிழகம்

First Published Mar 30, 2017, 3:52 PM IST
Highlights
tamilnadu got struck due to lorry strike


தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகையை இருமடங்காக உயர்த்தியது, டீசல் மீதான வாட் வரி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து தமிழகம், கர்நாடாகா, ஆந்திரா, உள்ளிட்ட 5 மாநில லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

வெறிச்சோடிய கோயம்பேடு காய்கறிச்சந்தை

தினமும் ஆயிரக்கணக்கான லாரி்கள் வந்து செல்லும் கோயம்பேடு காய்கறிச்சந்தை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. ஆந்திராவில் இருந்து தக்காளி, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வராததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்தமாக லட்சம் பேர் வந்து செல்லும் கோயம்பேடு யாரும் இல்லா பாலைவனம் போல காட்சியளிக்கிறது. காய்கறி வரத்து இல்லாததால் அவற்றின் விலையும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. 

நஷ்டத்தை சந்திக்கும் நாமக்கல்

பிராய்லர் கறிக்கோழி மற்றும் முட்டைக்குப் பெயர் போன நாமக்கல், வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்புடைய சரக்குகள் தேங்கியுள்ளன. இதனால் இம்மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள்  அன்றாட வருவாயை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. 

மந்தமான மஞ்சள் மாவட்டம் 

ஜவுளி மற்றும் மஞ்சளுக்குப் பிரசித்தி பெற்ற ஈரோடு, வேலை நிறுத்தத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் டன்  சரக்குகள் தொழிற்சாலைகளிலும் மஞ்சள் மண்டிகளிலும் தேங்கியுள்ளன. இதனால் 10 சுமார் கோடி ரூபாய் மதிப்புடைய வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

திருப்பூரில் கடுமையான பாதிப்பு

நாள் ஒன்றுக்கு 50 கோடிக்கும் அதிகமான வருவாயை அள்ளித் தரும் பின்னலாடை நகரமான திருப்பூர் போராட்டத்தால் பொலிவிழந்து காணப்படுகிறது. பனியன் தொழிற்சாலைகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும், நகரங்களுக்கும் அனுப்பப்பட வேண்டிய பின்னலாடைகள் குடோன்களில் குவியத் தொடங்கியுள்ளன. 

மாட்சி இழந்த மான்செஸ்டர் நகரம்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அறியப்படும் கோவை மாவட்டத்தில் வணிகம் அடியோடு ஸ்தம்பித்துள்ளது. சிமென்ட், கம்பி, தீவனங்கள், பம்ப்செட்டுகள், கிரைண்டர்கள் உள்ளிட்டவை வர்த்தகத்துக்கு எடுத்துச் செல்லப்படாமல் உள்ளன. மேட்டுப்பாளையத்தில் காய்கறிகள் தேக்கமடைந்து அழுகத் தொடங்கியுள்ளன.

லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயரும் என்பதால், மத்திய மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது.

click me!