
வேலூர்
வேலூரில், நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடையை பெண்கள் கல்லூரி அருகே அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொங்கி எழுந்த கல்லூரி மாணவிகள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்படி தமிழ்நாட்டின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளை தமிழக அரசு மூடியது.
மூடப்பட்ட சாராயக் கடைகளை, வேறு இடத்திற்கு மாற்றப்படும் போதுதான் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கிறது. சாராயக் கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு, அதனை குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் விடுதிகள் இருக்கும் பகுதிகளில் அமைக்க அதிகாரிகள் வழி தேடுவதால் அனைத்து பகுதிகளிலும் சாராயக் கடை வேண்டாம் என்று முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது.
ஆற்காடு – ஆரணி சாலையில் சாத்தூர் கூட்டுச்சாலை பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் சாராயக் கடை மூடப்பட்டு, அங்கிருந்து அகற்றப்பட்டது.
அகற்றப்பட்ட அந்த சாராயக் கடை வேறு இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டதையடுத்து ஆற்காடு – ஆரணி சாலையில் விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி அருகே டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு உள்ளனர்.
பொதுவான இடத்தில் சாராயக் கடை வைத்தாலே, அந்த பகுதியில் செல்லும் பெண்களின் பாதுகாப்பு உத்தரவாதம் கிடையாது. இதில், பெண்கள் கல்லூரில் அருகே சாராயக் கடை வைப்பது என்றால் சொல்லவா வேண்டும்.
கல்லூரில் அருகில் சாராயக் கடையா? என்று கொதித்து எழுந்த தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை வகுப்புகளைப் புறக்கணித்து ஆற்காடு – ஆரணி சாலையில் கல்லூரி முன்பாக சாலை மறியல் செய்தனர்.
பின்னர், இது குறித்து தகவலறிந்த இராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “கல்லூரி அருகில் டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க மாட்டோம்” என்று உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் தங்களதுப் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்தனர்.
மாணவிகள நடத்திய இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.