மளிகைக் கடை, வீட்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய காட்டு யானைகள்; அட்டகாசத்தை கட்டுப்படுத்த கோரிக்கை...

First Published Feb 22, 2018, 9:13 AM IST
Highlights
shop and house wall demolish by wild elephants Request to control the wild elephants ...


கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் மளிகைக் கடை மற்றும் வீட்டின் சுற்றுச்சுவரை இடித்துத் தள்ளி காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. நாள்தோறும் அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டுயானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூரை அடுத்த தாளியூர் யானைமடுவு வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆறு காட்டுயானைகள் கெம்பனூர் கிராமத்திற்குள் புகுந்தது.

இதில் மூன்று காட்டு யானைகள் அங்குள்ள பிள்ளையார் கோவில் தெற்கு வீதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜனின் (62) மளிகைக் கடையின் கதவை உடைத்து சேதப்படுத்தின. அதன்பின்னர், உள்ளே இருந்த அரிசி, பருப்பு மூட்டைகளை வெளியே தூக்கி வீசி, உணவுப் பொருட்களை தின்றன.

பின்னர, அந்த காட்டு யானைகள் அங்குள்ள ரங்கம்மாள், லாவண்யா ஆகியோரது வீட்டின் சுற்றுச் சுவர் கதவுகளை உடைத்துச் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. மேலும், தண்ணீர் குழாய்களை மிதித்து உடைத்தன.

இதனை அறிந்த மக்கள் பட்டாசு வெடித்தும், விளக்கு வெளிச்சம் பாய்ச்சியும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மேலும் மூன்று காட்டு யானைகள், கெம்பனூர் அருகே உள்ள உலியம்பாளையத்தில் உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த வனக்காப்பாளர் குமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்துவந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

பிள்ளையார் கோவில் தெற்கு வீதியில் அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனத்துறையினர் அட்டுக்கல் வழியாக வனப்பகுதியை நோக்கி விரட்ட முயன்றனர். அப்போது ஆத்திரம் அடைந்த காட்டு யானைகள் அங்கிருந்த ரத்தினசாமி என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளின.

அதன் பின்னர் அந்த யானைகள் அதிகாலை 4.30 மணியளவில் அட்டுக்கல் வழியாக அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டது. வாழைத்தோட்டத்தில் அட்டகாசம் செய்த 3 யானைகள் தாளியூர் வழியாக யானைமடுவு வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டன.

இதுகுறித்து மக்கள், "முள்ளிமானார், கோரபதி, வீரக்கல் செல்லும் சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி உலா வருகிறது. எனவே, காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

 

click me!