
நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா
கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5300ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 498 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 221
அதிகபட்சமாக கேரளாவில் 1,679 பேரும், குஜராத்தில் 615 பேரும், தமிழ்நாட்டில் 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவுக்கு வாலிபர் பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பேரப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(37). ஐதராபாத்தில் பில்டிங் காண்ட்ராக்டராக பணியாற்றி வந்தார். அவருக்கு திடீரென கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அங்கு மருத்துவரிடம் காண்பித்து விட்டு திண்டிவனத்தை அடுத்துள்ள சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இன்று காலை அவரது உடலை மோசமடைந்ததை அடுத்து உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இணை நோய்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்த விவரம் தெரியவில்லை. தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.