கருகிய பயிர்களைக் கண்ட விவசாயி அதிர்ச்சியில் இறப்பு…

First Published Dec 17, 2016, 10:43 AM IST
Highlights


திட்டச்சேரி,

திட்டச்சேரி அருகே தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை கண்ட விவசாயி அதிர்ச்சியில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகை மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு செய்திருந்த அனைத்து வயல்களிலும் நாற்று பதத்திற்கு முளைத்து வந்த நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. இதனால் சாகுபடிக்காக வாங்கிய கடனை கட்ட முடியாமலும், பயிர்கள் கருகியதை கண்டும் மனவேதனையில் விவசாயிகள் அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அருண்மொழி தேவன் பகுதியை சேர்ந்த விவசாயி சாமிநாதன் (53). இவர் தனக்கு சொந்தமான 2½ ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார்.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடாததாலும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனதாலும் வயலில் தண்ணீர் இல்லாமல் சாகுபடி செய்துள்ள பயிர்கள் கருகின. இதனால் சாமிநாதன் மனவேதனையில் காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று காலை வயலுக்குச் சென்ற அவர் பயிர் கருகி கிடப்பதை பார்த்த அதிர்ச்சியில் வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் யசோதா நேரில் சென்று பார்வையிட்டு, சாமிநாதனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இறந்துபோன சாமிநாதனுக்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் சாமிநாதன் வயலில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

click me!