
அனுமதியின்றி சாலை மறியல், முற்றுகை போராட்டம் நடத்தினால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழக காவல்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சனை, டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு உள்பட பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதுபோன்ற போராட்டங்கள் பெரும்பாலும் எவ்வித அறிவிப்பும் இல்லாமலும், உரிய அனுமதி பெறாமலும் நடக்கிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது.
இதையொட்டி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இதுதொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் ஆகியோர் பெஞ்ச் முன்பு இன்று, அந்த மனு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உரிய அனுமதியின்றி சாலை மறியல், முற்றுகை போராட்டம் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டனர்.