
தேனி
தேனியில், வளைகாப்புக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழந்து மரத்தில் மோதியதில் குழந்தை மற்றும் ஐந்து பெண்கள் உள்பட ஏழு பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தேனி மாவட்டம், கம்பம் அடுத்த கூடலூரைச் சேர்ந்தவர்கள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடலூருக்கு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சென்றுள்ளனர்.
பின்னர், சொந்த ஊருக்கு ஜனவரி 31-ஆம் தேதி திரும்பியபோது உத்தமபாளையம் நுழைவுப் பகுதியிலுள்ள கால்வாய் பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் , காரில் பயணம் செய்த கூடலூரைச் சேர்ந்த மோகன் மகள் அபிநயா (25), கதிரேசன் மனைவி தாமரை செல்வி (36), இந்திராணி (46), வினோதினி (26), குமார் மகள் தசனா (1) , ஓட்டுநர் கொடைக்கானலைச் சேர்ந்த ராஜேஷ் (26) உள்பட ஏழு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்தை நேரில் பார்த்த அக்கம்பக்கத்தினர் இவர்கள் அனைவரையும் மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வந்த உத்தமபாளையம் காவலாளார்கள் வழக்குப் பதிந்து விபத்து குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்