
சேலம்,
வாழப்பாடி காவலாளர்கள் தன் காதலனை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டார்கள். காதலனை சேர்த்து வைக்க கோரி, தூக்கு மாத்திரை சாப்பிட்டு காதலி தற்கொலைக்கு முயன்றார்.
சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரீத்தி (21). இவர் சேலம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது வாழப்பாடியில் குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் காதல் ஏற்பட்டது.
இவர்களின் காதல் வீட்டில் பெற்றோருக்கு தெரியவந்து, காதலன் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் பிரீத்தி தனது வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
வாழப்பாடி காவல் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்து, பாதுகாப்பு கேட்டது. காவலாளர்கள் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில் காதலனை பிரீத்தியிடம் இருந்து பிரித்து அனுப்பி விட்டனர். காதலனை பிரிந்த ஏக்கத்தில் வேதனையில் இருந்தார் பிரீத்தி.
இந்த நிலையில் காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனக்கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் பிரீத்தி மனு கொடுக்க சென்றார்.
அப்போது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரிடம் காவலாளர்கள் நடத்திய விசாரணையில், ‘வாழப்பாடி காவலாளர்கள் தன்னை, காதலனிடம் இருந்து பிரித்து விட்டனர். எனவே, தன்னுடன் காதலனை சேர்த்து வைக்கக்கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றேன்.
வீட்டில் இருந்து கிளம்பும்முன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு சென்றேன். அங்கு மனுவுடன் சென்றபோது மயங்கி விழுந்து விட்டேன்” என்றுத் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக காவலாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.