
கோவையில் பிரமாண்ட ஆதியோகி சிவன் சிலை…பிரதமர் மோடி இன்று திறந்து திறந்து வைக்கிறார்…
கோவை மாவட்டம் சிறுவாணியை அடுத்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை திறந்து வைக்கிறார்.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று பிரமாண்டமான இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
கோவை வெள்ளியங்கிரி மலையில் புகழ் பெற்று விளங்குவது ஈஷா யோகா மையம். இதன் தலைவராக சத்குரு ஜக்கிவாசு தேவ் இருக்கிறார். இந்த மையத்திற்கு நாள்போறும் ஆயிரக்கணக்கானோர் வந்து தியானம் செய்து வருகின்றனர்.
ஆனால் ஜக்கி வாசுதேவ் மீது வனத்தை அழித்தாக புகார் எழுந்துள்ளது. இதனால் இங்கு நடைபெறவுள்ள விழாவில் பிரதமர் கலந்து கொள்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தராராஜே சிந்தியா, மகாராஷ்ரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
மாலை 6 மணிக்கு விழா மேடைக்கு செல்லும் பிரதமர், 112 அடி உயரம் கொண்ட சிலையை திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் விழா முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.
அங்கு ஓய்வு எடுத்துவிட்டு இரவு 9 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி கோவையிலும் விழா நடைபெறும் பகுதியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.