தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை ஒரு வாரத்திற்குள் இணையத்தில் வெளியிட வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு, நீதிமன்றம் கெடுக்குப்பிடி…

 
Published : Feb 24, 2017, 07:07 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை ஒரு வாரத்திற்குள் இணையத்தில் வெளியிட வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு, நீதிமன்றம் கெடுக்குப்பிடி…

சுருக்கம்

மதுரை

தேர்தல் செலவு கணக்கு காட்டாததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை ஒரு வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு, மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை நரிமேட்டைச் சேர்ந்த கண்ணன், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது மதுரை மாநகராட்சி 41–வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக எனது மனைவி சுமதி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அ.தி.மு.க.வின் நடப்பு கவுன்சிலராக இருந்த இந்திராணியும் மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு பரிசீலனையின்போது இந்திராணி, 2011–ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தன்னுடைய தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை.

எனவே, தேர்தல் விதிகளின்படி அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்று புகார் செய்தேன். அதை தேர்தல் அதிகாரி பெற்றுக் கொண்டார். ஏற்பு ரசீது வழங்குமாறு கேட்டேன். ஆனால் உள்ளாட்சி தேர்தல் கையேட்டில் ஆட்சேபனை மனுவுக்கு அத்தாட்சி ரசீது வழங்குமாறு குறிப்பிடப்படவில்லை என்று கூறி ரசீது வழங்க தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டார்.

மேலும் இந்திராணியின் வேட்பு மனுவையும் ஏற்றுக் கொண்டார்.

இதனையடுத்து 2011–ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் கணக்கு தாக்கல் செய்யாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுமாறு மாநில தேர்தல் ஆணையருக்கு மூன்று முறை கடிதம் அனுப்பினேன்.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளுமாறு பதில் அனுப்பப்பட்டது. ஆனால் இணையதளத்தில் அதுதொடர்பான பட்டியல் வெளியிடப்படவில்லை.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், வாக்காளர் பட்டியல் வெளியிடுவது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவது, நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்துவது ஆகியவை தேர்தல் ஆணையத்தின் கடமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த கடமைகளை மாநில தேர்தல் கமி‌ஷன் சரிவர கடைபிடிக்கவில்லை.

வேட்பாளர் மனு மீது ஆட்சேபனை தெரிவிக்கும்போது, அதற்கு ஏற்பு ரசீது வழங்காவிட்டால் தேர்தலுக்கு பின் சட்டப்பூர்வ உதவிகள் பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. எனவே 2011–ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் கணக்குகளை தாக்கல் செய்யாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக வெளியிட உத்தரவிடவேண்டும்.

மேலும், ஆட்சேபனை மனுவுக்கு ஏற்பு ரசீது வழங்க, தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர் கையேட்டில் வழிகாட்டுதல் அளிக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதன் விசாரணை முடிவில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு குறித்து மாநில தேர்தல் ஆணையர், மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதில் அளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் 8–ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!