
மதுரை
அடித்தட்டு மக்களின் வளர்ச்சியே ஒரு நாட்டின் முழுமையான வளர்ச்சி என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேசினார்.
மதுரை சுப்பராமன் நினைவு ஆரம்பப் பள்ளியில் சேவாலயம் மாணவர் இல்லம் சார்பில், சுதந்திரப் போராட்ட தியாகி வைத்தியநாத ஐயர் நினைவு தின நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியது:
“இந்தியா பல சமூகங்களை கொண்டது. பெரும்பாலானோர் தமது சொந்த சமூக உரிமைக்காக போராடுகின்றனர். ஆனால், வைத்தியநாத ஐயர் தனது சமூகத்தை தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடினார்.
அடித்தட்டு மக்களின் வளர்ச்சியே ஒரு நாட்டின் முழுமையான வளர்ச்சி. சாதி அமைப்புகள் நாட்டின் விஷ வித்துக்கள்; அவற்றை புறக்கணிக்க வேண்டும்.
ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும். தாங்கள் யாருக்கும் கீழானவர்கள் இல்லை என்ற எண்ணம், பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்களிடம் ஏற்பட வேண்டும்.
தமிழ் மொழியில் படித்தால் முன்னேற முடியாது என்பது தவறான கருத்து. முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், 'இஸ்ரோ' விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் தமிழ் வழியில் கற்றவர்கள்தான்” என்று பேசினார்.
சேவாலய செயலர் சீனிவாசன், இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.