அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்
தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன்படி, காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க தீவிரம் காட்டினர். ஆனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், இதுதொடர்பான முறையீட்டின்படி, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்திய சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி, வருகிற 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, மருத்துவமனையிலேயே வைத்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை 8 நாட்கள் விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து, அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றதே தவறு என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு அமலாக்கத்துறை தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இந்த மனு மீது நாளை விசாரணை நடத்தப்படலாம் என தெரிகிறது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என கோரி செந்தில் பாலாஜியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.