தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செய்தது? மத்திய அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்!

Published : Nov 20, 2025, 09:19 PM IST
Senthil Balaji

சுருக்கம்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததைக் கண்டித்து, கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் என்று அவர் குற்றம் சாட்டினார்.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததைக் கண்டித்து, கோவையில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. நிர்வாகியுமான செந்தில்பாலாஜி தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில்பாலாஜி, மத்திய அரசின் இந்த முடிவை தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் எனக் கடுமையாக விமர்சித்தார்.

அரசியல் உள்நோக்கம்

செந்தில்பாலாஜி பேசுகையில், "கோவை-மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு அற்ப காரணம் காட்டி நிராகரித்திருப்பது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல். பாஜக ஆளும் மாநிலங்களில் இதேபோன்ற திட்டங்களுக்கு ஐந்து மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டிற்கு மட்டும் திட்ட அனுமதி மறுக்கப்படுவது அரசியல் நோக்கத்தையே காட்டுகிறது" என்று குற்றம் சாட்டினார்.

மேலும், "விரிவான திட்ட அறிக்கையில் சந்தேகம் இருந்தால், அதைத் தெளிவுபடுத்த 15 மாதங்கள் அவகாசம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டிற்கு பாஜக அரசு இதுவரை ஏதாவது ஒரு சிறப்புத் திட்டம் கொண்டு வந்துள்ளதா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மாநில அரசுக்குத் திறன் உள்ளது

சென்னை மெட்ரோ திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது போலவே, கோவை மற்றும் மதுரை திட்டங்களையும் மாநில அரசு சுமூகமாகச் செயல்படுத்தும் திறன் கொண்டது என்று செந்தில்பாலாஜி உறுதிபடத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "கோவையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. கோவையின் உண்மையான வளர்ச்சி தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் நடந்து வருகிறது. எனவே, கோவைக்கும் மதுரைக்கும் மிகவும் அவசியமான இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தலுக்கு முன்பே மாற்றப்படும் செல்வப்பெருந்தகை..? டெல்லிக்கு போன ரிப்போர்ட்..!
காவல்துறைக்கு ஜாக்பாட்.. தமிழக அரசு சொன்ன ஸ்வீட் நியூஸ்.. என்ன விஷயம்?