
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். முன்னதாக, செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும். ஆனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், இதுதொடர்பான முறையீட்டின்படி, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்திய சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி, வருகிற 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனால், மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளார். இதனிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்தி இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பரிசோதனைகள் முடிந்து உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என தெரிகிறது.
அதேபோல், தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத்துறையும் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்கள் மீது நீதிபதி அல்லி விசாரணை நடத்தினார். அப்போது, காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, எனவே, உண்மையை கண்டறிய காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது கட்டாயம் என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.
செந்தில் பாலாஜி இலாக்காக்கள் மாற்றம்: பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு? - என்ன காரணம்?
செந்தில் பாலாஜி தரப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு அமலாக்கத்துறையால் சித்திரவதைக்கு உள்ளானேன் என தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். 15 நாட்கள் காவலில் செல்ல இயலுமா என்ற நீதிபதியின் கேள்விக்கு செந்தில் பாலாஜி தரப்பு இயலாது என தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை மாவட்ட முதன்மை அமர்வு, உயர் நீதிமன்ற தீர்ப்பையும் பார்க்க வேண்டும் என கூறி, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனு மீதான தீர்ப்பை நாளை தள்ளி வைத்துள்ளது.
முன்னதாக, உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது, ஏற்கனவே நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால், காவல் விசாரணைக்கு அனுமதிக்க முடியாது என கூறி செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கேட்டு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஜாமீன் என்ற கேள்விக்கு இடமில்லை என்றும், அவர் நீதிமன்றக் காவலில் தொடர்வார் என்றும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டவிரோத கைது தொடர்பான முக்கிய மனு, பின்னர் விசாரிக்கப்படும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைய நிலவரப்படி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை எனவும், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.