அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இதனையடுத்து மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜி கைது
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இருதய பகுதியில் அடைப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை அடுத்து காவிரி மருத்துவமனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைதொடர்ந்து புழல் சிறையில் கடந்த ஜூலை மாதம் அடைக்கப்பட்டார்.
undefined
செந்தில் பாலாஜிக்கு உடல் நிலை பாதிப்பு
100 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி பலமுறை ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் தொடர்ந்து ஜாமின் மறுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதமாகவே செந்தில் பாலாஜியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. கால் அடிக்கடி மரத்துப் போவதாகவும் கூறப்பட்டது, இதற்கான சிகிச்சையும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி அழைத்துவரப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை செய்தனர்.
செந்தில் பாலாஜிக்கு பித்தப்பை
இதனை தொடர்ந்து சிறப்பு மருத்துவ குழுவினர் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதனை செய்ததில் அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது தெரிய வந்தது. பித்தப்பையில் உள்ள கல்லை அகற்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நரம்பியல் மருத்துவர்களும் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதனை செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் செந்தில் பாலாஜிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகும் அதனை குறைக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகளுக்குப் பிறகே மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்வது தொடர்பாக அடுத்த கட்டமான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை வட்டார தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்