தாராபுரம் அடுத்த மனக்கடவு அருகே டேங்கர் லாரியும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பழனி சாலை மனக்கடவு அருகே கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெட்ரோல் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தாராபுரத்தை அடுத்த மனக்கடவு அருகே டேங்கர் லாரியும், காரும் மோதி எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில் 4-பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கலாராணியை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கலாராணி சிகிச்சை பலனின்றி தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக அலங்கியம் காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி (51), இவரது மனைவி சித்ரா (49), தாராபுரம் உடுமலை சாலையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (78), இவரது மனைவி செல்வராணி (70) மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கலாராணி என்பது தெரிய வந்துள்ளது. சாலை விபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய பொழுது காரும் - டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 5-பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D