அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையின் முதல் வகுப்பில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் வகுப்பில் இருப்பவர்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கும்
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அவரது நீதிமன்ற காவல் வருகிற 26ஆம் தேதி நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமலாக்கத்துறை கைதின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து அவர் ட்ஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், சென்னை புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை செய்துள்ளதால், அவருக்கு மருத்துவர்களின் கண்காணிப்பு தேவை. இதனால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை நன்றாக தேறிய பிறகு செந்தில் பாலாஜி கைதிகள் அறைக்கு மாற்றப்படுகிறார். அதேசமயம், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
சிறையில் முதல் வகுப்பு வசதி கைதிகளுக்கு மற்ற கைதிகளை விட கூடுதலாக சில வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதன்படி, மின்விசிறி, கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, நாளிதழ்கள், தொலைக்காட்சி போன்ற வசதிகள் வழங்கப்படும். புழல் சிறையில் சாதாரண கைதிகளுக்கு வெண் பொங்கல், உப்புமா, கஞ்சி ஆகியவை மாறி மாறி வழங்கப்படுகின்றன. இதில் இருந்து முதல் வகுப்பு வசதி கைதிகளுக்கு விலக்கு அளிக்கப்படும். அவர்கள் இட்லி, தோசை போன்றவற்றை கேண்டீனில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். மற்ற கைதிகளுக்கு இட்லி, தோசை எப்போதாவது வழங்கப்படும்.
டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்: இதெல்லாம் வேலைக்கு ஆகாது - மதுப்பிரியர்கள் யோசனை!
மதிய உணவாக சாதம், சாம்பார், கூட்டு ஆகியவை வழங்கப்படுகிறது. இது வேண்டாம் என்றால், வேறு உணவுகளை கேண்டீனில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இரவு உணவாகவும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி எடுத்துக் கொள்ளலாம். முதல் வசதி வகுப்பு கைதிகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறியுடன் சாதம் வழங்கப்படுகிறது. அசைவம் வேண்டாம் என்றால், அதற்கு பதில் சாம்பார், நெய், பொரியல், வாழைப்பழம் பெற்று சாப்பிட அனுமதி உண்டு. சிறையில் வழக்கமான உணவுடன் கூடுதலாக அவர்களுக்கு சப்பாத்தியும் வழங்கப்படும்.
சிறை கேண்டீனில் மற்ற கைதிகள் வாரந்தோறும் ரூ.750க்கு பொருட்கள் வாங்கிக் கொள்ள அனுமதி என்றால், முதல் வகுப்பு கைதிகள் ரூ.1000 வரை பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். சிறைக் கண்காணிப்பாளர் அனுமதியளித்தால் வெளியிலிருந்து பாத்திரங்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். பால் மற்றும் தேநீரின் அளவு கூடுதலாக வழங்கப்படும். சீருடைக்கு பதிலாக சாதாரண உடைகளை அணிந்து கொள்ளலாம். கூடுதல் பாதுகாப்பு வசதி, பிரத்யேக மருத்துவ வசதிகளும் அவர்களுக்கு கிடைக்கும். செந்தில் பாலாஜிக்கு இதுவரை வெளியில் இருந்து உணவு கொண்டு வந்து வழங்க அனுமதி இல்லை. அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் விரும்பினால் நீதிமன்றம் மூலம் சிறப்பு அனுமதி பெற்று சமைத்து கொண்டு போய் கொடுக்கலாம்.
புழல் சிறையில் முதல் வகுப்பு வசதி என்பது செந்தில் பாலாஜிக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் கிடைப்பது அல்ல. சிறைகளில் முதல் வசதி வகுப்புகள் இருக்கும், நீதிமன்றம் அனுமதி அளிக்கும் கைதிகளுக்கு முதல் வகுப்பு சலுகை கொடுக்கப்படும். சிறையில், சிவில் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றக் காவலில் வைக்கப்படுபவர்கள், விசாரணைக்காக ரிமாண்டில் இருப்பவர்கள், தீர்ப்பு உறுதியாகி தண்டனை அனுபவிப்பவர்கள் என மூன்று வகையாக கைதிகள் பிரிக்கப்படுகின்றனர். இதில் உட்பிரிவுகளும் உள்ளன, குற்றத்தின் தன்மை, உடல்நிலை, போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இதில், கைதிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப நீதிமன்ற அனுமதியின் பேரில் முதல் வகுப்பு வசதி வழங்கப்படுகிறது. இது ஒருவருக்கு அரசாங்கம் வழங்கும் சலுகை கிடையாது. முதல் வகுப்புக்கென்று விதிமுறைகளின்படி என்னென்ன வசதிகள் இருக்கிறதோ அவை செய்து கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.