செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு: நாளை பிற்பகல் மீண்டும் விசாரணை!

By Manikanda Prabu  |  First Published Feb 14, 2024, 6:04 PM IST

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை பிற்பகல் மீண்டும் விசாரணை நடைபெறும் என  சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது


சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுத்து விட்டது. இருப்பினும், மருத்து ஜாமீன் கோராமல் சாதாரண ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறும் செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 3ஆவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Tap to resize

Latest Videos

அந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர மறுப்பு  தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி குறித்தும் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தது. இதனிடையே, செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பாஜகவில் இணைந்த கோவை திமுகவினர்!

இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கானது இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிப்பதற்கு பதிலாக இந்த வழக்கை விரைவாக விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தொடர்ச்சியாக ஜாமின் மனு தாக்கல் செய்ய முடியாது. சகோதரர் அசோக் குமாரும் தலைமறைவாக உள்ள நிலையில் செந்தில் பாலாஜியும் ஜாமீனில் வெளியில் வந்தால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.” என கூறப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகிவிட்டதால் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார். “அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் வழக்கில் சந்தர்ப்ப சூழல்கள் மாறியுள்ளது. அமைச்சராக இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற அமலாக்கத்துறையின் வாதம் தற்போது செல்லாததாகிவிட்டது. வழக்கு தொடர்பான புலனாய்வு நிறைவடைந்துவிட்டதாகவும் அனைத்து ஆதாரங்களையும் தாக்கல் செய்துவிட்டதாகவும் அமலாகத்துறை கூறிவிட்டது.” என ஆர்யமா சுந்தரம் வாதிட்டார்.

இதையடுத்து, அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்க, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை பிற்பகலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, அமலாக்கத்துறை தரப்பு வாதங்களுக்காக விசாரணை நாளை பிற்பகலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

click me!