
தமிழகத்தில் வரும் அமித்ஷா : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிக்கு அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியுள்ளது. தற்போது வரை பாஜகவை தங்கள் அணிக்கு இழுத்த அதிமுக, அடுத்ததாக தேமுதிக மற்றும் பாமகவை இழுக்க காய் நகர்த்தி வருகிறது. ஆனால் தேமுதிக ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக மீது அதிருப்தியில் உள்ளது. இதனால் தேமுதிகவிடம் அதிமுக நிர்வாகிகள் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.
அதே நேரம் பாஜகவின் மூத்த தலைவரான அமித்ஷா தமிழகத்தில் தேர்தல் நிலவரம், கட்சியின் செயல்பாடு, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது தொடர்பாக ஆலோசிக்க விரைவில் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அந்த வகையில் வருகிற 8ஆம் தேதி மதுரைக்கு அமித்ஷா வரவுள்ளளார். அப்போது கூட்டணி கட்சி தலைவர்கள் அமித்ஷாவை சந்திப்பார்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமித்ஷா மதுரையில் வரும் 8 ம் தேதி கால் பதிக்க வேண்டும் என்பதற்காகதான் அமித்ஷா வருகின்றார்,
கால் மட்டும் அல்ல வேரும் பதிக்கும், ஆலமரமாக முளைக்கும், பசுஞ்சோலையாக மாறும் எனவும் தெரிவித்தார். திருப்பரங்குன்ற முருக பக்தர் மாநாட்டில் நாங்கள் ஒன்று கூடினால் அது செயின்ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர். அதிமுக - பாஜக கூட்டணியில் இணையும் படி ஏற்கனவே விஜய்க்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இனிமேல்தான் பதில் வரும் என நினைப்பதாகவும் தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியில் நடக்கும் விவகாரம் என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம் என தெரிவித்தார். அதை பேசுவது அவ்வளவு நாகரிகமாக இருக்காது என தெரிவித்த அவர், அப்பா மகனுக்கு இடையே இருக்கக்கூடிய சொந்த பிரச்சனையை அவர்கள் பேசி தீர்க்க வேண்டும் எனவும் கூறினார்.