
முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான செங்கோட்டையன் அண்மையில் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட செங்கோட்டையனுக்கு கட்சியில் இணைந்ததுமே தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் என முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக கட்சியில் இணைந்ததும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் தனது சட்டைப் பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தவாறு அமர்ந்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், புகைப்படத்தை மாற்ற வேண்டும் என தவெக என்னை வலியுறுத்தவில்லை. மேலும் யார் படத்தை வைத்திருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட உரிமை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் வாழ்த்து செய்தியில் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் பேசுபொருளாக மாறி உள்ளன. குறிப்பாக பேனரில் கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரின் படங்கள் இடம் பெற்றிருந்த நிலையில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜூனாவின் புகைப்படம் இடம் பெறவில்லை.
அதே போன்று முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் புகைப்படமும் அவரது போஸ்டரில் இடம் பெற்றுள்ளதால், ஜெயலலிதாவை தமிழக வெற்றி கழக தலைமை ஏற்றுக் கொண்டுள்ளதாக என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக எம்ஜிஆர், அண்ணா ஆகியோரின் புகைப்படங்களை விஜய் பயன்படுத்தி இருக்கிறார். மேலும் அவர்களை வெளிப்படையாக கொள்கை தலைவர்களாக விஜய் அறிவித்துள்ளார். ஆனால் ஜெயலலிதாவை கொள்கைத் தலைவர் என எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படிப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை செங்கோட்டையன் பயன்படுத்தி இருப்பது பேசுபொருளாகி உள்ளது.