
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக வருகின்ற டிசம்பர் 15ம் தேதிக்குள் எங்களை கட்சிக்குள் இணைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றப்பட்டு 15ம் தேதி அதிரடி அறிவிப்பு வெளியிடப்படும், எங்கள் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்குவதற்கான பணிகளை தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக கோவை சென்றிருந்த பன்னீர்செல்வத்தை நேரில் சந்திக்க பாஜக மேலிடத்தில் இருந்து அழைப்பு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உடனடியாக கொச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி பயணித்துள்ளார்.
நேற்று டெல்லி சென்ற பன்னீர்செல்வம் அங்கு சில பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலும் இன்றும் அவர் அங்கு முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளார். பாஜக மேலிடம் அழைத்ததன் அடிப்படையிலேயே பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருப்பதாக அவரது ஆதரவாளர் தெளிவு படுத்தி உள்ளார். எடப்பாடி பழனிசாமியை மட்டும் நம்பி தேர்தலை சந்திப்பது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம்.
இதனை உணர்ந்தே பன்னீர்செல்வம் முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பாக அவரை அழைத்து பேச முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையிலேயே தற்போது சந்திப்பு நடைபெறுகிறது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் தெரிவித்துள்ளார்.