
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வது உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டம் தெடர்பாக பேசிய அக்கட்சியின் மூத்த நிர்வாகி நிர்மல்குமார், “எங்கள் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாக குழு தலைவர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பணிகள் தொடர்பாகவும், தேர்தல் பணிகளை நிர்வாகிகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் தவெகவுக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு, எங்களுக்கு எதிராக ஆளும் கட்சி நிகழ்த்தும் சூழ்ச்சிகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது” என தெரிவித்தார்.
இந்நிலையில் பொதுக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசிய சில முக்கிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. “இனி அதிமுக கிடையாது, தமிழக வெற்றி கழகம் தான் அதிமுகவின் முகம். வருகின்ற ஜனவரி மாதம் தவெகவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளேன். அதிமுகவில் அதிருப்தியில் உள்ள பலரை தவெகவில் இணைக்க முயற்சிப்பேன். தவெக இன்னொரு அதிமுகவாக மாறம். தவெகவை பலப்படுத்துவது என் பொறுப்பு. மாவட்ட செயலாளர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்” என உறுதி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.