
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்கள் எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நடவடிக்கைகள் முடங்கின.
அவைத் தலைவர் ஓம் பிர்லா அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியதைத் தொடர்ந்து டிசம்பர் 3-ஆம் தேதி முதல் இரு அவைகளின் நடவடிக்கைகளும் சுமூகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரின் 9-ம் நாள் நிகழ்வுகள் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெற்றன. அப்போது, தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், திராவிடக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் சாம்பியனாகத் திகழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார். மேலும், சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் அவர் சாம்பியனாக விளங்கினார் எனக் குறிப்பிட்டார்.
ஆட்சி நிர்வாகத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும், ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அவர் செயல்பட்டதாகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதோடு, தான் போட்டியிட்ட அனைத்துச் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வென்றவர் கலைஞர் என்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறினார்.
இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தனது கோரிக்கையை வலியுறுத்தினார்.