
Seeman Protests With Cattle In Theni: தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற போது வனத்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி தாக்கியதாக தகவல் வெளியானது. மேலும் மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து செல்வதாக கூறி மரங்களை வெட்டி கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை சிலர் செய்வதாக வனப்பகுதியில் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு வனத்துறையினர் அதிரடி தடை விதித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகஸ்ட் 3ம் தேதி (இன்று) தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அடவுபாறையில் மாடுகளை மேய்த்து போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்து இருந்தார். அதன்படி இன்று சீமான் நாம் தமிழர் கட்சியினர், விவ்சாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் 150க்கும் மேற்பட்ட மாடுகளுடன் அடவுபாறை வனப்பகுதிக்குள் செல்ல முயன்றார்.
மலையேறிச் சென்று மாடுகளை மேய்த்தனர்
சீமான் மற்றும் அவருடன் சென்றவர்களை வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். இதை எதிர்த்து சீமான் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, "மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது இயற்கையான ஒரு செயல். இது வனத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும்" என்று அவர் வாதிட்டார். தொடர்ந்து சீமான் உள்ளிட்ட அனைவரும் காவல்துறை தடையை மீறி மலையேறிச் சென்று மாடுகளை மேய்த்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
மாடுகளுக்கு போராட தெரியவில்லை
இதன்பிறகு பேசிய சீமான், ''கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளை வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். கூரிய கொம்புகள் இருந்தும் மாடுகள் வண்டியை இழுத்துக் கொண்டிருக்கின்றன. மாடுகளுக்கு போராட தெரியவில்லை. மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே வனப்பகுதிகள் பாதுகாக்கப்படும். வனப்பகுதியில் காட்டுத்தீ பரவுவது தடுக்கப்படும்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''நீரின்றி அமையாது உலகு எனில் ஆடு, மாடு இன்றி அமையாது காடு. இலங்கையில் நடந்ததை போல தமிழகத்திலும் இனப்படுகொலை நடக்கிறது. இலங்கையில் குண்டுகளை வீசி இனப்படுகொலை செய்தனர். இங்கு குடிக்க வைத்து இனப்படுகொலை செய்துகொண்டிருக்கின்றனர். டாஸ்மாக் மூலம் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுகின்றனர்'' என்று தெரிவித்தார்.