
தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலராக உள்ள அலெக்ஸிஸ் சுதாகர் மீது மூன்று வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்த நடவடிக்கைகள் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அலெக்ஸிஸ் சுதாகர், கடந்த ஜூன் மாதம் மாமல்லபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர்மீது பண மோசடி மற்றும் ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகள் உள்ளன என கூறி, கோவை துடியலூர் மற்றும் குனியமுத்தூர் காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர், குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை அறிவுரை குழு ரத்து செய்ததை தொடர்ந்து, சுதாகருக்கு மூன்று வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவரை கைது செய்து சிறையில் அடைத்த முழுமையான நடவடிக்கையை நீக்க கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், "கைது செய்ய காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. குடும்பத்தினருக்கும் தகவல் வழங்கப்படவில்லை. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது" எனக் கூறினார் குறிப்பிட்டார். எனவே அந்த கைது நடவடிக்கைகள் செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது.