
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை முதல் அனைவரும், போலீசாரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால், போலீசாருக்கும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போர்க்களமாக மாறி வருகிறது.
இதையொட்டி சென்னை காமராஜர் மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்து வருகின்றனர். தண்ணீரில், கை கோர்த்தபடி மனித சங்கிலி போராட்டம் நடத்துகின்றனர்.
தற்போது கடலில் இறங்கி போராட்டம் நடத்தும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை, யாரும் சந்திக்க முடியாமல் போலீசார் தடுத்து வருகின்றனர்.
இன்று காலை நடிகர் லாரன்ஸ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர், மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்திக்க சென்றனர். ஆனால், அவர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தடுத்து நிறுத்தினர்.
மெரினா மணல் பரப்பில் போராட்டம் நடத்தியபோது, பல்வேறு அமைப்பினர் உணவு, மருந்து உள்பட அனைத்து வகையான உதவிகள் செய்து வந்தனர். தற்போது, கடல் நடுவில் போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் மாணவர்கள், உணவு, மருந்து இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்வதற்கும் முடியாத சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சாலை வழியாக சென்றால், போராட்டம் நடத்தும மாணவர்களை சந்திக்க முடியாது என்பதால், கடல் வழியாக, படகு மூலம் சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களும், மருந்துகளையும் கொடுத்தார்.