
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை முதல் அனைவரும், போலீசாரால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால், போலீசாருக்கும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போர்க்களமாக மாறி வருகிறது.
இதையொட்டி சென்னை காமராஜர் மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்து வருகின்றனர். தண்ணீரில், கை கோர்த்தபடி மனித சங்கிலி போராட்டம் நடத்துகின்றனர்.
இந்நிலையில், மெரினாவில் இருந்து செல்ல மறுத்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் 4 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:-
1. ஜல்லிக்கட்டு அவசர சட்டம் சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றப்பட்டதும், அதன் முன்வடிவு வரைவின் நகலை சென்னை மாவட்ட கலெக்டர் எங்களிடம் நேரிடையாக வழங்க வேண்டும்.
2. அவசர சட்டம், சட்டமாக இயற்றப்பட்டதும், அதுவே நிரந்தர சட்டமாகிவிடுமே என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, சந்துரு, ஹரி பரந்தாமன் ஆகியோர் கருத்து பகிர வேண்டும்.
3. நாங்கள் நலமாக இருக்கிறோம். எங்களைப் பற்றி வரும் எந்த வதந்திகளையும் தமிழக சொந்தங்கள் நம்ப வேண்டாம். அறவழியில் மட்டுமே போராடுவதே நம் குறிக்கோள். அதனால் யாரும் கலவரத்தில் ஈடுபட்டு, நம் நோக்கத்தை சிதைக்க வேண்டாம்.
4.நாடாளுமன்றத்தில் ஜல்லிக்கட்டு சட்டம் நிரந்தரமாக்க வேண்டும். இதன் மூலம் பீட்டா போன்ற எந்த அமைப்பும் உச்ச நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெறும் சூழல் ஏற்படாத நிலையைக் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.