
வனத்தை ஆண்ட சிங்கம் மரித்து விழுந்துவிட்ட பிறகு சிறு புழுக்கள் கூட அச்சமின்றி அதன் மீசையில் ஊஞ்சலாடும். இதே நிலைதான் கொடநாடு பங்களாவில் நிகழ்ந்திருக்கும் கொலையும்!...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் கொடநாடு பகுதியிலிருக்கிறது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களா. 1994வாக்கில் அதிகாரப்பூர்வமாக இந்த பகுதியில் பல ஏக்கர்களை ஜெயலலிதா வாங்கினார் என்று தகவல். கிட்டத்தட்ட எண்ணூற்று ஏக்கர் என்கிறார்கள். சுற்றிலும் தேயிலை எஸ்டேட்டுகள் விரிந்திருக்க அதன் நடுவில் ரசித்து ரசித்து இந்த பங்களாவை ஜெ.,வும் சசியும் இணைந்து வடிவமைத்து கட்டினார்கள். இந்த பங்களாவுக்கென்று ஏகப்பட ஸ்பெஷாலிட்டிகள் உண்டு. எவ்வளவு முயன்றாலும் வெளியிலிருந்து பங்களாவை அவ்வளவு எளிதாக பார்த்துவிட முடியாது. பக்கத்தில் உள்ள சிறு குன்றின் மீதேறி நின்றாலும் கூட போட்டோவுக்கு சிக்காது. துவக்கத்தில் எஸ்டேட்டினுள் இப்படியொரு பிரம்மாண்ட பங்களாவை ஜெ., உருவாக்கியிருக்கிறார் என்று வெளியில் யாருக்கும் தெரியாது.
ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியின் போது அக்கட்சி சார்பாக கொடநாடு பஞ்சாயத்து தலைவராக இருந்த பொன்தோஸ், கோடநாடு பகுதியில் ஜெயலலிதா கட்டிடம் மற்றும் பொது பாதைகள் விஷயத்தில் பல விதிமீறல்களை நிகழ்த்தி அவற்றை அனுபவித்து வருகிறார் என்று பிரச்னையை கிளப்பிய பிறகு, கட்டுமானத்தை ஆய்வு செய்ய வருமான வரித்துறை உள்ளே நுழைந்ததும், போலீஸுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் முறுக்கியதும், அதன் விளைவாக பங்களாவின் பிரம்மண்டத்தை வேண்டுமென்றே போலீஸ் வெளியிட்டதும்...என்று பல கூத்துகள் நிகழ்ந்தன.
கொடநாடு பங்களாவின் கட்டமைப்பு பற்றிய பல பிரமிப்பு தகவல்கள் அ.தி.மு.க.வின் சீனியர் புள்ளிகள் மத்தியிலேயே உண்டு. உள்ளே சுரங்க அறைகள் உள்ளன...என்பதில் ஆரம்பித்து பல நிரூபிக்கப்படாத ஹேஸ்யங்களும் உள்ளன. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், தான் முதல்வராக இருக்கும் பட்சத்தில் கொடநாட்டில் தங்கியிருக்கும் வேளையில் இங்கிருந்தே ஆட்சியை நடத்தும் வகையில் ஒரு மினி தலைமை செயலகத்தையே வடிவமைத்து வைத்திருக்கிறார் ஜெ, என்பது மட்டும் உண்மை. பல துறை செயலர்களுடன் அவசர மீட்டிங் நடத்துவதில் ஆரம்பித்து அத்தனையையும் இங்கே நடத்திக் கொள்ள வசதியுண்டு.
அரசு நிர்வாக ரீதியாக ஜெ., பல விஷயங்களை கொடநாடை மையப்படுத்தி செய்தாரென்றால், பங்களாவை நிர்வகிக்கும் பவர் முழுவதும் சசியின் கைகளில்தான் இருந்தன. பங்களாவினுள் வைப்பதற்காக புதுவித மலர் செடிகளை ஊட்டி பொட்டானிகல் கார்டனிலிருந்து சசி வாங்கி வருவது வழக்கம். சிம்பிளாக ஒரு சுடிதாரை போட்டபடி பொட்டானிகல் கார்டனுக்குள் ஆளரவமில்லாத அதிகாலை நேரத்தில் சசி அலைந்து பிடித்து பூச்செடி நாற்றுகள் எடுப்பதும், அந்த தொட்டியை தூக்கிக் கொண்டு வாகனத்தை நோக்கி வனம் அல்லது தோட்டக்கலை துறையின் முக்கிய அதிகாரிகள் ஓடுவதும் பல நாட்கள் நடந்த கூத்து. பொட்டானிகல் கார்டனின் மரங்களில் வாசம் செய்யும் பறவைகளை கேட்டால் கெக்கே பிக்கே சிரிப்புடன் இந்த கதைகளை சொல்லும்.
ஜெ.,வின் கொடநாடு பங்களாவை கடந்துதான் கொடநாடு காட்சி முனை (வியூ பாயிண்ட்) பகுதிக்கு டூரிஸ்டுகள் செல்ல வேண்டும். ஜெ., இங்கே தங்கியிருந்தால் போதும், அதிலும் அவர் முதல்வராக வேறு இருந்தால் அம்புட்டுதேன். கோத்தகிரியிலிருக்கும் கொடநாடு ஜங்ஷனிலிருந்தே கெடுபிடியை ஆரம்பித்துவிடும் போலீஸ் துறை. இன்ச் பை இன்ச் ஸ்கேன் செய்தே வைத்திருப்பார்கள். தமிழ்நாடு போலீஸ் போதாது, ஜெ.,வுக்கான கறுப்பு பூனை பாதுகாப்பு போதாது என்று கொடநாடில் ஜெ., இருக்கும் காலங்களில் பங்களாவை சுற்றி அதிரடிப்படையையும் நிறுத்தி வைத்து காற்றையும் விசாரித்துவிட்டே வீச அனுமதிப்பார்கள் . தனது தலைவா பட ரிலீஸில் சிக்கல் வந்தபோது கொடநாடில் தங்கியிருந்த ஜெயலலிதாவை சந்தித்து உதவி கேட்க வந்த நடிகர் விஜய், பங்களாவிலிருந்து சில கிலோமீட்டர் முன்னாடியே நிறுத்தி இறக்கிவிடப்பட்டதும், கால் வலிக்க காத்து கிடந்தும் கூட அனுமதி கிடைக்காமல் திரும்பியதும் கொடநாடு பங்களாவின் சாகச கதைகளில் ஒன்று.
பல நூறு ஏக்கரில் விரிந்து கிடக்கும் கொடநாடு எஸ்டேட் மட்டுமில்லாது சமீப சில வருடங்களுக்கு முன் அதன் அருகிலிருக்கும் கர்சன் எஸ்டேட் எனும் எஸ்டேட்டையும் ஜெ., வாங்கினார். இது சுமார் 900 ஏக்கர் இருக்குமாம். இந்த எஸ்டேட் பகுதியில் ஹெலிபேடே அமைக்கப்பட்டிருக்கிறது ஜெ.,வின் வசதிக்காக. ஜெ., மற்றும் சசி வசதிக்காக கட்டுப்பாடுகள் நிறைந்த இந்த வனப்பகுதியிலும், அதை ஒட்டிய பட்டா நிலங்களிலும் நடத்தப்பட்ட விதிமீறல்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையே!