
திண்டுக்கல்
கொடைக்கானலில் நிலவும் குளுமையான் சீசனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கோடை முடிவதற்குள் நீங்கள் ஒரு டிரிப் போயிட்டு வந்துடுங்க…
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது நிலவும் குளுமையான சூழ்நிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நகரின் மையப்பகுதியில் நட்சத்திர ஏரி உள்ளது. அங்கு படகுசவாரி செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்கின்றனர்.
இதனருகே அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பல வண்ண பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
மேலும், மோயர் பாயிண்ட், பில்லர் ராக், குணா குகை, பைன் மரக்காடுகள், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களும் உண்டு.
இதைத் தவிர வனத்துறை அனுமதி பெற்று மதிகெட்டான் சோலை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் கண்டு களிக்கலாம்.
கொடைக்கானலில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் மன்னவனூர் உள்ளது. ஒரு நாள் முழுவதும் பார்த்து ரசிக்கும் அளவுக்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கூடியது மன்னவனூர்.
இயற்கை எழில் கொஞ்சும் மன்னவனூர் மலைக் கிராமத்துக்கு செல்லும் வழியில் பூம்பாறை என்ற கிராமம் இயற்கை அன்னையின் அளப்பரிய கொடையை பறைசாற்றும். சாலையின் இருபுறத்திலும் மரம், செடி, கொடிகளின் அணிவகுப்பை ரசிக்கலாம். அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மனதை கொள்ளை கொள்ளும் ரம்மியமான சூழல் இங்கு நிலவுகிறது.
பூம்பாறை கிராமத்தில் இருந்து பழனி முருகன் மலைக்கோவிலின் காட்சியை காண முடியும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும். இங்கு பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் உள்ளது.
பூம்பாறையில் இருந்து மன்னவனூர் நோக்கி பயணிக்கும் போது விவசாய நிலங்களில் காய்த்து தொங்கும் காய்கறிகள், பழங்கள் கண்களை கொள்ளை கொள்ளும். குறிப்பாக கொத்து, கொத்தாய் காய்த்து தொங்கும் ஆப்பிள் பழங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர்.
சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு இடையே மன்னவனூர் ஏரி அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இந்த ஏரி உள்ளது.
இங்கு பரிசல் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர். பரிசலில் சவாரி செய்வதை செல்போனில் படம் எடுத்து லைக்ஸை அள்ளுவர்.
மன்னவனூரில், திரும்பி பார்க்கும் திசையில் எல்லாம் பசுமைக்கு பஞ்சம் இல்லை. இங்கிருக்கும் அடர்ந்த புல்வெளியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில், மத்திய செம்மறி ஆடு மற்றும் ரோம ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் மற்றும் முயல்கள் ஆராய்ச்சிக்காக வளர்க்கப்பட்டு வருகிறது.
ஆடுகளில் பாரத் மெரினா, அவிகாலின் உள்ளிட்ட ரகங்களும், முயல்களில் வைட் ஜெயண்ட், சோவியத் சின்சிலா உள்ளிட்ட வகைகளும் பராமரிக்கப்படுகிறது.
மன்னவனூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள், ரூ.20 கட்டணம் செலுத்தி ஆடு மற்றும் முயல்களை கண்டுகளிக்கலாம். அவைகளை வளர்க்கும் முறை, சூழலை தெரிந்து கொள்ளலாம். மேலும் ஆடுகளின் ரோமங்களில் இருந்து தயாரிக்கப்படுகிற பொருட்களையும் வாங்கி செல்லலாம். இங்குள்ள புல்வெளியில், குதிரையில் சவாரி செய்து உலா வரலாம்.
சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, மகளிர் சுய உதவி குழு சார்பில் உணவுக்கூடம் நடத்தப்படுகிறது. மன்னவனூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் விளைகிற காய்கறிகளைக் கொண்டு, பல்வேறு வகை உணவுகள் தயாரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுவையாக பரிமாறப்படுகிறது.
சூழல் சுற்றுலா மையமாக மன்னவனூர் திகழ்கிறது. இதனை சுற்றிப் பார்ப்பதற்கு பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறுவர்களுக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பரிசல் சவாரி செய்ய ஒருவருக்கு ரூ.75-ம் வனத்துறை சார்பாக வசூல் செய்யப்படுகிறது. பசுமை நிறைந்த புல்வெளியில் நடந்தபடியே மன்னவனூர் ஏரியை பார்த்து ரசிப்பது கண்களுக்கு சிறந்த விருந்தாகும்.
இங்கு சுற்றுலா பயணிகள் மலையேற்ற பயிற்சி மேற்கொள்ளவும் வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஏரியின் அருகே உள்ள புல் வெளியில் அமர்ந்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள சுற்றுலா பயணிகள் தவறுவதில்லை.
சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு விடுதியும் இங்கு உள்ளது. ஆனால் 20 பேர் மட்டுமே தங்கும் வகையில் விடுதி அமைந்துள்ளது. இதற்கு முன் பதிவு செய்வது அவசியம் ஆகும். சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக விடுதி கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், இயற்கையான முறையில் 20-க்கும் மேற்பட்ட மூங்கில் வீடுகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. நவீன உலகில் சுத்தமான காற்றை சுவாசித்து, பசுமை போர்த்திய இயற்கை அழகை பல்வேறு பொழுதுபோக்கு அம்சத்துடன் கண்டு களிக்க மன்னவனூர் பகுதி ஏற்றதாக திகழ்கிறது.
இப்படி கொஞ்சும் அழகை தன்னகத்தே கொண்ட கொடைக்கானலில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருக்கிறது. நீங்கள் கொடைக்கானலில் எங்க போக போறீங்க?,…