
கொலக்கம்பை
கொலக்கம்பை அருகே 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தவர்கள் இருந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது என்று உத்தரவிடப்பட்டு, வீடுகளை காலி செய்து சீல் வைத்தது நீதிமன்றம்.
கொலக்கம்பை அருகே உள்ள கெந்தளா ஜீவா நகரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக 63 குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
இவர்கள் வசித்து வந்த இடம் தனியார் ஒருவருக்குச் சொந்தமானது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனி நபருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து ஜீவா நகரில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. மேலும் காவலாளர்கள், வருவாய்த் துறையினர், நீதிமன்ற ஊழியர்கள் வீடுகளுக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த மாதம் 10 வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனிடையே மீதமுள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று தனிநபர் மூலம் வலியுறுத்தப்பட்டது. ஒரு சிலர் தாங்களாவே முன்வந்து வீடுகளை காலி செய்தனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை, வீடுகளை காலி செய்ய வேண்டுமென்று வீடுகளில் இருந்து பொருட்களை வெளியே எடுத்து வைத்து வீடுகளுக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர் அதிகாரிகள்.
இதையொட்டி காவல் துணை சூப்பிரண்டு முத்தமிழ் தலைமையில் காவல் இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், இலட்சுமணன், தங்கம் ஆகியோர் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டது.
பின்னர், வருவாய்த்துறை முன்னிலையில் நீதிமன்ற ஊழியர்கள் 7 வீடுகளுக்கு சீல் வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.