இஸ்லாமிய ஆயுள் சிறைக்கைதிகள் 5 பேர் விடுதலை: எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு!

By Manikanda Prabu  |  First Published Feb 6, 2024, 3:27 PM IST

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது


நீண்டநாள் சிறையில் கழித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி, எஞ்சியுள்ளவர்களையும் தாமதிக்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தியுள்ளது. மேலும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்த அதிமுக மற்றும் அனைத்து ஜனநாயக அமைப்புகளுக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 33 நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. சமீபத்தில் மதுரையில் நடந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநாட்டிலும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி முதல் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்நிலையில், பல நீண்ட போராட்டங்களின் விளைவாக  அபுதாஹிர், ஹாரூண் பாஷா, சாகுல் ஹமீத், குண்டு ஜாஹிர், ஊம் பாபு ஆகிய 5 சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விடுதலையை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வரவேற்பதோடு, எஞ்சியுள்ள சிறைக்கைதிகளையும் தாமதிக்காமல் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

Latest Videos

undefined

மேலும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் பரோலுக்கு பெரும் சிக்கலாக இருந்துகொண்டிருக்கும் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட அரசாணை (25/04/2022 G.O. (MS) No:205) பிரிவு 15 மற்றும் Tamil Nadu Suspension of Sentence Rules, 1982 சட்டவிதிகளில் 2022ல் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை ரத்து செய்து, நீதிமன்ற நடவடிக்கையில் அரசே நீண்ட பரோல் விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.  

அரசு வேலை: கணக்கு இடிக்குதே - அண்ணாமலைக்கு பிடிஆர் குட்டு..!

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை என்பது முஸ்லிம் சமூகத்தின் பல்லாண்டு கோரிக்கையாகும். இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தும், அதிமுக பொன்விழா மாநாடு மற்றும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றியும், முஸ்லிம் சிறைவாசிகள் கோரிக்கையை பொது கோரிக்கையாக்கி, அதனை அரசு செயல்படுத்த காரணமாக இருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அஇதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கும் மற்றுமுள்ள அனைத்து ஜனநாயக அமைப்புகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படும் வரை எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து குரலெழுப்பும், போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!