குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கக் கோரி  தாரை தப்பட்டையுடன்  வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் மாணவர்கள்….

First Published Jun 7, 2018, 11:15 PM IST
Highlights
school teachers and students probaganda for new students in Nilgiri dist


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பழங்குடியினர் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க  அப்பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் தாரை தப்பட்டையுடன் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று தங்கள் பள்ளியின் பெருமைகளை சொல்லி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க  பெற்றோர்களிடம்  கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கிட்டத்தட்ட 850 பள்ளிகளை மூடப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதை மறுத்தார்.

மாணவர் வருகை எவ்வளவு குறைவாக இருந்தாலும் பள்ளிகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் மூட வாய்ப்பில்லை என தெரிவித்தார். அதே நேரத்தில் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க   பாரம்பரிய உடையுடன் ஆசிரியர்களும் , தாரை தப்பட்டையுடன்  மாணவர்கள் கிராமங்களுக்கு சென்று தங்களது  பள்ளியின் அருமை, பெருமைகளை சொல்லியும், தாய் தந்தையருக்கு சந்தன மாலை அணிவித்தும்  குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்க விநோத கோரிக்கையை வைத்தனர்.இது எங்கு நடந்தது தெரியுமா?

 நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள  பந்தலூர் தாலுக்காவிற்குட்பட்ட தேவலா பகுதியில் அரசு பழங்குடியின  உண்டு உறைவிட நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தனியார் பள்ளியின் ஆதிக்கத்தையும் மீறி சுமார் 300 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் மேலும் புதிய மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க அந்தப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். அதன்படி பள்ளியை சுற்றி உள்ள 8 கிராமங்களுக்கு நேரடியாக சென்று மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிராமங்களுக்கு தற்போது படிக்கும் மாணவர்களுடன் பாரம்பரிய உடையுடன் செல்லும் ஆசிரியர்கள் , அங்குள்ள குழந்தைகளின் பெற்றொர்களுக்கு சந்தன மாலை அணிவித்து இரு கரம் கூப்பி தனது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கோரிக்கை வைக்கின்றனர்.

பின்னர் தற்போது படிக்கும் மாணவ மாணவிகள் தற்போது அரசு பள்ளியில் கிடைக்கும் சலுகைகள், மற்றும் அரசு பள்ளியில் படித்தவர்களின் தற்போதய உயர்ந்த நிலை குறித்து தாரை தப்பட்டை முழங்க வசனமாக பேசி நூதன முறையில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் இந்த புது வகை பிரச்சாரத்துக்கு அங்குள்ள பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

click me!