
போராட்டக்காரர்களை சமூக விரோதி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியது அவர்களை அசிங்கப்படுத்தும் செயல் என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த காப்பர் ஆலைக்கு எதிராக அப்பகுதி கிராம மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தின் 100-ஆவது நாளில் ஆயிரக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் அரசு வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் எரிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் இதில் 13 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 30 ஆம் தேதி தூத்துக்குடி சென்றார். அங்கு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவியும் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு சமூக விரோதிகளின்
ஊடுருவலே காரணம் என்று கூறினார். சமூகவிரோதிகள், விஷகிருமிகள் என்று ரஜினி கூறியது தமிழகம் முழுவதும் எதிர்ப்பலையை உண்டாக்கியது.
இந்த நிலையில், சமூக விரோதி என்று கூறிய ரஜினிகாந்த் மீது வழக்கு பதிய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஓசூரைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளார். அந்த மனுவில், போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என ரஜினி கூறியது மக்களை அசிங்கப்படுத்தும் செயல். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலம்பரசன் அந்த மனுவில் கூறியுள்ளார்.