
அரசு ஆஸ்பத்திரியில் மனைவிக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்த டாக்டரின் போட்டோவை ஃபேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஜோதி 3-வது முறையாக கர்ப்பமடைந்துள்ளார்.
அந்த கர்ப்பத்தை கலைக்க விஜயகுமார் மனைவியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். புறநோயாளிகள் பிரிவில் இருந்த பெண் டாக்டர் பவானியை சந்தித்தனர்.
டாக்டரிடம், எங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். 3வது குழந்தை வேண்டாம். கருவை கலைத்து விடுங்கள் என்றனர். டாக்டர் பவானி கருக்கலைப்பு சட்ட விரோதம். கருக்கலைப்பு செய்ய முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதனால், கோபமான விஜயகுமார், டாக்டர் பவானியிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் நீங்கள் எங்கு சென்று கருவை கலைத்தாலும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர் பவானி எச்சரித்தார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த விஜயகுமார், தனது செல்போனில் டாக்டர் பவானியை போட்டோ பிடித்து அதை பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமாக எழுதி பதிவிட்டார். மேலும் டாக்டர் பவானி குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்துள்ளார்.
விஜயகுமாரின் இந்த இழிவான செயலை அறிந்த டாக்டர் பவானி, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.