
திருநெல்வேலி
ஆவுடையானூரில் இருக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை மூடவேண்டி பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோருடன் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் கருணாகரன் தலைமை தாங்கினார். அவர் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மாவட்ட வருவாய் அதிகாரி முத்துராமலிங்கம், சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் விஜயலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் பொடியனூரில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை மூடவேண்டும் என்று வலியுறுத்தி ஆவுடையானூர், பொடியனூர், வைத்திலிங்கபுரம், அரியபுரம், கடையம்பெரும்பத்து, வெய்க்காலிப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.
பெரும் படையாய் வந்த மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நெல்லை மாநகர உதவி காவல் ஆணையர் விஜயகுமார், ஆய்வாளர்கள் தில்லை நாகராஜன், வேல்கனி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவ, மாணவிகளின் சார்பில் பெற்றோர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், அந்த டாஸ்மாக் சாராயக் கடையை மூடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்தார்.