அரசு பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் பள்ளி மாணவி பலி; நசுங்கிய உடலின் முன்பு பொதுமக்கள் அழுது புலம்பல்...

First Published Jun 23, 2018, 10:40 AM IST
Highlights
school student died bus lift up down body crushed people cry...


கடலூர்
 
கடலூரில் அரசு பேருந்தில் பயணித்த பள்ளி மாணவி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகேவுள்ளது பலாப்பட்டு காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் அல்லிமுத்து. இவருடைய மகள் தனலட்சுமி (16). இவர் சி.என்.பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.

தினமும் காலையில் பட்டீஸ்வரத்தில் இருந்து எடையார்குப்பம், சி.என்.பாளையம் வழியாக நடுவீரப்பட்டுக்குச் செல்லும் அரசு பேருந்தில் தான் பள்ளிக்கு செல்வார் தனலட்சுமி. பேருந்தை பிடிப்பதற்காக தனலட்சுமி பலாப்பட்டில் இருந்து எடையார்குப்பத்துக்கு நடந்து செல்வார். 

இந்த நிலையில், நேற்று காலையில் பட்டீஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து, எடையார்குப்பத்திற்கு வந்தபோது தனலட்சுமி பேருந்தில் ஏறினார். அந்தப் பகுதியில் இருந்து காலையில் வேறு பேருந்து எதுவும் இல்லாததால் இந்த பேருந்து மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். 

பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் தனலட்சுமி பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் நின்று பயணம் செய்தார். கொஞ்சிக்குப்பம் பகுதியை அடைந்தபோது பேருந்தில் இருந்து தனலட்சுமி தவறி கீழே விழுந்தார். அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் தனலட்சுமி மீது ஏறி, இறங்கியது. இதில், அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நடுவீரப்பட்டு காவலாளர்கள் விரைந்து சென்று, தனலட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்த புகாரின்பேரில் நடுவீரப்பட்டு காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழித்தடத்தில் ஒரே ஒரு பேருந்து விட்டு, பேருந்தில் 100-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்ததால்தான் உயிர்  பலி ஏற்பட்டுள்ளது என்று தனலட்சுமியின் உடலின் முன்பு கூடிய பொதுமக்கள் கதறி அழுது புலம்பினர்.

click me!