கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு….பட்டுப் பூச்சிகளாய் சிறகடித்துப் பறக்கும் மாணவ-மாணவிகள்….

First Published Jun 1, 2018, 7:20 AM IST
Highlights
school reopen today all over tamilnadu


கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. தமிழக பாடத்திட்டத்தின் படி  இன்று முதல், 2018 - 19ம், கல்வி ஆண்டு துவங்குகிறது.பள்ளி மாணவ மாணவிகள் புதிய சீருடையில் இன்று பள்ளிக்குச் செல்கின்றனர்.

தமிழக பாடத்திட்டத்தில் படிப்போருக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஜூனில் கல்வி ஆண்டு துவங்கி, மே மாதம் முடிவடையும். ஏப்ரலில் பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படும்.

அதன்படி, 2017 - 18ம் கல்வி ஆண்டில், பொது தேர்வுகளும், ஆண்டு இறுதி தேர்வுகளும் முடிந்து, அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து, ஏப்ரல், 21ல் துவங்கிய கோடை விடுமுறை, 41 நாட்களை கடந்து, நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. ஒரு  சில தனியார் பள்ளிகள் மட்டும், பள்ளி திறப்பை, 4ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளன.புதிய கல்வி ஆண்டு துவங்குவதை ஒட்டி, மாணவர்கள் தேர்ச்சியின் அடிப்படையில், இன்று புதிய வகுப்புகளுக்கு மாற்றப்படுகின்றனர்.

பல பள்ளிகளில், புதிய வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு, வாழ்த்து கூறுவதோடு, இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு பிரார்த்தனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இலவச பாட புத்தகங்களும், நோட்டு புத்தகங்களும் இன்று வழங்கப்பட உள்ளன. அதேபோல, மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, இலவச சீருடையும் வழங்கப்படுகிறது.

புதிய கல்வி ஆண்டில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஒன்பது, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கும், சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. ஆறு முதல் எட்டு வரையிலான மாணவர்களுக்கு, பழைய நிறத்திலேயே சீருடை வழங்கப்படுகிறது

click me!